ஞாயிறு, 13 மார்ச், 2011

கலைத்தீபம் கண்ட கலைமகள்!

சாந்தமருதூராம் கிழக்கு மண்ணில்
ஆய்ந்து கலை செய்யும் அறிவையாள் ஹிதாயா -
                          
                                         வாய்மையின்
அந்தி வானத்து அழகு நிலவாம்
இந்த மண்ணில் இவள் பெருமை !

உள்ளத்து ணர்வுக்குள் உறங்காப் படைப்புக்குள்
தெள்ளத் தெளிவாம் செகத்திடை மாந்தர்க்கு-
                                                                வெள்ளையாய்     
தாள் பதிக்கும் தகைசேர் இலக்கியங்கள்
கொள்கை கொள்ளுமாம் குணம்.

கை கொண்டு நடக்கும் இவழெழுத்துப் பயணங்கள்
மெய் கொண்டு வாழுமாம் மேதினியில் - மை கொண்ட
தையல் இவள் பேறு தவழும் நெஞ்சுக்குள்
வையாது வாழுமாம் வகை.

பெண்ணாக நின்று பேசுகின்ற மனிதங்கள்
கண்ணாகிக் கலைக்குள் காவலாய் விழிக்கும்-
                                                                எண்ணியே

வன்மைக்கு எதிராக வழக்காடி நின்று
    கண் துடைக்குமாம் கலை.

கலைமகள் கையேந்தும் தூரிகைப் பணிகள்
நிலைகளில் நிற்கும் நீக்கமறு சேர்ந்து -தலையாய்
கலையில் குடிகொண்டு கணக்குமாம் மண்ணில்
காலத்தால் இவள்பணி கணிப்பு

பூக்கும் கரம்பட்டு புதுப்புது நிஜங்கள்
ஆக்கும் பணிக்குள் அரண்மனை அமைக்கும் -
                                                              பக்கமாய்
எக்கோணம் விரிந்தாலும் எழுத்துக்கள் எரியும்
மிக்க பணியாம் பணி.

பட்டமும் பல்கலையும் பாவை உனக்காகி
தொட்ட பணிக்காக தொடர்ந்தவை சுகமாய்-
                                                               எட்டியே
சுட்ட தங்கமாய் சுடரொளி தந்தவை
கட்டாயம் காட்டுமாம் கணிப்பு.

பத்திரிகை வானொலிப் பட்டறைத் தளங்களில்
முத்திரை பதித்தவைகள் முன்னுரை கொள்ளும்-
                                                                 சித்தங்களில்
சித்திரமாய் சீர்மேவும் சிறப்பகங்கள்
       நித்தம் வாழுமாம் நியதி!


கலைமகள் ஹிதாயா ரிஸ்வியை பாராட்டி கலாப்பூஷணம் கவிஞர் பதியத்தலவை பாறூக் அவர்கள் கலைத்தீப விழாவின் போது பாடிய கவிதை இது...
          

செவ்வாய், 4 ஜனவரி, 2011

கலையுலகில் கலைமகள்........



கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டம்,கல்முனை தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த  'வைத்தியகலாநிதி' யூ.எல்.ஏ.மஜீத்,ஸைனப் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியான ஹிதாயா றிஸ்வி அவர்கள்;கலைமகள் ஹிதாயா,ஹிதாயா மஜீத்,நிஷா ஆகிய பெயர்களில் இலக்கியம் படைத்து வரும் எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார்.
 இவர் கல்முனை மகளிர் கல்லூரி,பம்பலபிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரி கல்-எளிய அரபிக்கலாபீடம் ஆகியவற்றின் பழைய மாணவியாவார்.இவர்  வெகுசனதொடர்புசாதன டிப்ளோமாவையும் பூர்த்திசெய்துள்ளார்.
தான் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவரின் கன்னி கவிதை (புதுக்கவிதை) 1982-04-01 ம் திகதி 'மீண்டும்'எனும் தலைப்பில் தினகரனிலும்,அதேதினம்'சிந்தாமணி'பத்திரிகையில்'அன்னை'எனும் தலைப்பில் மரபுக்கவிதையும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.அன்றிலிருந்து  இன்றுவரை மூன்று தசாப்தகாலமாக மரபுக்கவிதை,புதுக்கவிதை,சிறுகதை,கட்டுரை,நெடுங்கதை,விமர்சனம்,மெல்லிசைபாடல்கள் என தவறாமல் எழுதிவரும் இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட புதுக்கவிதைகளையும்,மரபுகவிதைகளும் எழுதிக்குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவரின் படைப்புக்கள் இலங்கை தேசிய பத்திரிகைகளிலும்,இந்திய இலங்கை சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.இவரது கவிதைகள் தென்கிழக்குபல்கலைகழக தமிழ்துறை மாணவி நிந்தவூர் ஆசிரியை ரிஸ்லா அவர்களாலும்,கிழக்குபல்கலைகழக தமிழ்துறை மாணவ ஆசிரியர் முபாரக் அவர்களாலும் ஆய்வுசெய்து ஆய்வேடு சமர்பித்துள்ளனர்.பல்வேறு சமூகசேவை,இலக்கியமன்றங்களில் அங்கத்துவம் வகிப்பதோடு மலேசியாவிலுள்ள உலகத்தமிழ் கவிஞர் பேரவையிலும் முக்கிய இடத்தையும் வகிக்கின்றார்.இலங்கை வானொலியில் பல நிகழ்சிகளிலும் குரல் கொடுத்துள்ள இவர் ரூபவாஹினிக்கவியரங்கிலும் முதன்முதலில் பங்குகொண்ட முஸ்லிம்பெண் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டவர்,அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.சிந்தனை வட்டத்தின் 99 வது வெளியீடான 'தேன்மலர்கள்' இலங்கையில் முஸ்லிம் பெண் கவிஞர் ஒருவரால் எழுதி வெளியிடப்பட்ட முதல் மரபுக்கவிதைத் தொகுதி என்பதும் குறிபிடத்தக்கது.கலைமகள் ஹிதாயாவின்  மூன்றாவது கவிதை தொகுதி 'இரட்டை தாயின் ஒற்றைகுழந்தை'எனும் தலைப்பில் சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீடாக வெளிவந்தது.கவிதைத்தொகுதியின் தலைப்புக்கேற்ப இத்தொகுதியினை மஸீதா புன்னியாமீனுடன் எழுதியமை குறிப்பிடத்தக்கது.இவற்றுடன் சிந்தனைவட்டத்தின்  கவிதைத் தொகுதிகளான 'புதிய மொட்டுக்கள் ',
'அரும்புகளி'லும் ,காத்தான்குடி கலை இலக்கிய வட்ட வெளியீடான 'மணி மலர்கள்' மரபுக்கவிதை தொகுதியிலும் ,சாய்ந்தமருது நூல் வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான 'எழுவான் கதிர்களிலும்' இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.இவரது இலக்கியப் பனியின் முக்கிய கட்டமாக 'தடாகம்'
இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டமையைக் குறிப்படலாம்.ஒரு பெண்ணாக இருந்த போதிலும்  கூட 12  இதழ்களை இவர் வெளிக் கொண்டு வந்தார்.
 இவ் இதழ்களில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா,ஸீ.எல்.பிரேமினி,பேராசிரியர் சு.வித்தியானந்தன்,ஏ.யூ.எம்.ஏ .கரீம்,கல்ஹின்னை ஹலீம்தீன்,புன்னியாமீன் ஆகியோரின் புகைப் படங்களை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளார்.சில நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளார்.இவர் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்தாலும்   கொழும்பு-வெள்ளவத்தை  ஹோட்டல்  சபயாரில் நாகபூஷணி கருப்பையா எழுதிய 'நெற்றிக்கண்'கவி நூலை வெளியீட்டு  சாதனை படைத்தார்.ஒரு முஸ்லிம் பெண் எழுத்தாளர் என்ற வகையில் இவரின் பணி பாராட்டத்தக்கது.