ஞாயிறு, 13 மார்ச், 2011

கலைத்தீபம் கண்ட கலைமகள்!

சாந்தமருதூராம் கிழக்கு மண்ணில்
ஆய்ந்து கலை செய்யும் அறிவையாள் ஹிதாயா -
                          
                                         வாய்மையின்
அந்தி வானத்து அழகு நிலவாம்
இந்த மண்ணில் இவள் பெருமை !

உள்ளத்து ணர்வுக்குள் உறங்காப் படைப்புக்குள்
தெள்ளத் தெளிவாம் செகத்திடை மாந்தர்க்கு-
                                                                வெள்ளையாய்     
தாள் பதிக்கும் தகைசேர் இலக்கியங்கள்
கொள்கை கொள்ளுமாம் குணம்.

கை கொண்டு நடக்கும் இவழெழுத்துப் பயணங்கள்
மெய் கொண்டு வாழுமாம் மேதினியில் - மை கொண்ட
தையல் இவள் பேறு தவழும் நெஞ்சுக்குள்
வையாது வாழுமாம் வகை.

பெண்ணாக நின்று பேசுகின்ற மனிதங்கள்
கண்ணாகிக் கலைக்குள் காவலாய் விழிக்கும்-
                                                                எண்ணியே

வன்மைக்கு எதிராக வழக்காடி நின்று
    கண் துடைக்குமாம் கலை.

கலைமகள் கையேந்தும் தூரிகைப் பணிகள்
நிலைகளில் நிற்கும் நீக்கமறு சேர்ந்து -தலையாய்
கலையில் குடிகொண்டு கணக்குமாம் மண்ணில்
காலத்தால் இவள்பணி கணிப்பு

பூக்கும் கரம்பட்டு புதுப்புது நிஜங்கள்
ஆக்கும் பணிக்குள் அரண்மனை அமைக்கும் -
                                                              பக்கமாய்
எக்கோணம் விரிந்தாலும் எழுத்துக்கள் எரியும்
மிக்க பணியாம் பணி.

பட்டமும் பல்கலையும் பாவை உனக்காகி
தொட்ட பணிக்காக தொடர்ந்தவை சுகமாய்-
                                                               எட்டியே
சுட்ட தங்கமாய் சுடரொளி தந்தவை
கட்டாயம் காட்டுமாம் கணிப்பு.

பத்திரிகை வானொலிப் பட்டறைத் தளங்களில்
முத்திரை பதித்தவைகள் முன்னுரை கொள்ளும்-
                                                                 சித்தங்களில்
சித்திரமாய் சீர்மேவும் சிறப்பகங்கள்
       நித்தம் வாழுமாம் நியதி!


கலைமகள் ஹிதாயா ரிஸ்வியை பாராட்டி கலாப்பூஷணம் கவிஞர் பதியத்தலவை பாறூக் அவர்கள் கலைத்தீப விழாவின் போது பாடிய கவிதை இது...